×

பாஜவுக்கு பாடம் கற்பிக்க இந்தூர் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களியுங்கள்: காங்கிரஸ் அழைப்பு

இந்தூர்: மக்களவை தேர்தலில் இந்தூர் தொகுதி வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. மத்தியபிரதேசத்தின் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் கடந்த 19, 26 ஆகிய தேதிகளில் 12 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. மீதமுள்ள 17 தொகுதிகளுக்கு மே 7, 13 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் இந்தூர் தொகுதியில் கடைசி கட்டமான மே 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தூர் தொகுதியில் பாஜ வேட்பாளராக தற்போதைய மக்களவை உறுப்பினர் சங்கர் லால்வானி மீண்டும் போட்டியிடுகிறார்.

அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் அக்ஷய் காந்தி பாம் நிறுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் அக்ஷய் காந்தி பாம் கடந்த 29ம் தேதி மத்தியபிரதேச பாஜ பேரவை உறுப்பினரான ரமேஷூடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, தன் வேட்பு மனுவை திரும்ப பெற்றார். தொடர்ந்து அவர் பாஜவில் இணைந்தார். இதனால் இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும் இதர வேட்பாளர்களில் பெரும்பாலானோர் சுயேச்சைகள் என்பதால் பாஜ வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜவின் அச்சுறுத்தல்கள், சித்ரவதைகள் காரணமாகவே அக்ஷய் காந்தி பாம் வேட்பு மனுவை திரும்ப பெற்றதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷோபா ஓஜா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின்போது, “கடந்த மாநகராட்சி, பேரவை தேர்தல்களில் இந்தூர் வாக்காளர்கள் பாஜவுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தனர். ஆனால் அதையும் மீறி அக்ஷய் காந்தியை பாஜ விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை கொலை செய்து விட்டது. பாஜவுக்கு தகுந்த பாடம் கற்பிக்க இந்தூரில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 25.13 லட்சம் வாக்காளர்களும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார்.

The post பாஜவுக்கு பாடம் கற்பிக்க இந்தூர் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களியுங்கள்: காங்கிரஸ் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Indore ,BJP ,Congress ,Lok Sabha ,Madhya Pradesh ,
× RELATED இந்தூர் மக்களவை தொகுதியில் ‘நோட்டா’வுக்கு ஆதரவும் எதிர்ப்பும்…